இளைப்பாறும் இடைவெளிகூட இல்லாமல் கரோனா பெருந்தொற்று வர்த்தக நிறுவனங்களைத் திணறடிக்கிறது. ஊரடங்கு இயல்புநிலைக்குத் திரும்பினாலும், வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குவார்களா? என்ற கேள்வி நிறுவனங்களிடம் எழாமல் இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க சம்பள குறைப்பு, ஆள்குறைப்பில் ஈடுபட்டுவருகின்றன.
அந்த வகையில் உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி (இணைய சீருந்து) நிறுவனமான உபர், 3 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த மாதம் மூன்றாயிரத்து 700 பேரை பணிநீக்கம் செய்தது.
இது தவிர, உலக நாடுகளில் இருக்கும் 45 அலுவலகங்களை மூடியுள்ளது. சிலவற்றை வேறு வர்த்தகத்துடன் இணைத்துள்ளது. இதன்மூலம் இனிவரும் வாரத்திலும் உபர் அதிகளவிலான பணிநீக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, உபர் தலைமை நிர்வாக அலுவலர் தாரா கோஸ்ரோசாகி, “கடும் நெருக்கடியில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் உபருடைய முதன்மையான சேவைகளான கால் டாக்சி, உணவு, மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு கொண்டுச் சேர்ப்பது போன்றவற்றுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
தற்போது, உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் சேவை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சீருந்து சவாரி சேவை ஓரளவு நன்றாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. டாக்சி சேவையில் 80 விழுக்காடு வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
வர்த்தக முன்னேற்றத்துக்கு கரோனா பெருந்தொற்று நெருக்கடி முடியும்வரை காத்திருக்க வேண்டும். இந்த நெருக்கடியால் முதல் காலாண்டில் 2.9 பில்லியன் டாலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்!