வாஷிங்டன்:பைட் டான்ஸ்நிறுவனத்தின் சிறு காணொலி பகிர்வு தளமான ‘டிக் டாக்’ (TikTok) இன் முழு அமெரிக்க வணிகத்தையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, 90 நாட்களில் டிக் டாக்கின் அமெரிக்க வணிகத்தை முழுவதுமாக ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தகவல் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, சீன நிறுவன சமூக வலைதள குறுந்தகவல் பகிரும் ‘வீ சாட்’ (WeChat) செயலியையும் தடை செய்ய ட்ரம்ப் திட்டமிட்டு, அதன் உரிமத்தையும் அமெரிக்காவிற்கு வழங்கினால், செயலிக்கு தடை விதிக்கப்படமாட்டாது என்று மிரட்டியிருந்தார் அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்காவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக, அமெரிக்காவுடன் மேலும் சில நாடுகளின் டிக் டாக் உரிமத்தை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவந்ததாக தகவல்கள் வெளியாயின.
அதேபோல், இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை தற்போது அமலில் இருப்பதால், அதன் இந்திய உரிமத்தை வாங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் கசிந்துவருகிறது. இவ்வேளையில் இந்தியாவில் டிக் டாக் போன்ற சிறு காணொலி பகிர்வு தளமான ’ஷேர் சாட்’ (ShareChat)தளத்தில் மைக்ரோசாப்ட் பல கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.