அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆர்வம் தெரிவிப்பதற்கான காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் ஆர்வம் தெரிவித்து கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.
இது ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் தெரிவித்து சமர்ப்பித்த கடிதமே தவிர, இறுதி ஏல ஒப்பந்தம் கோரும் கடிதம் அல்ல. அடுத்த 15 நாள்களில் டாடா குழுமம்தான் ஏலம் கேட்கவுள்ள தொகையைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இழப்பைச் சந்தித்துவரும் அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனைசெய்ய 2018ஆம் ஆண்டு முடிவுசெய்யப்பட்டது. இருப்பினும், இதற்குச் சரியான நிறுவனம் கிடைக்காததால் ஏலம் கேட்பதற்கான இறுதி தேதி பலமுறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனம் 1932ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி. டாடாவால் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டு பொதுத் துறை நிறுவனமாகச் செயல்பட தொடங்கியது.