தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனா - ஸ்பைஸ்ஜெட் பணியார்களுக்கு சம்பளம் கட்! - ஸ்பைஸ்ஜெட்

மும்பை: ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும் நெருக்கடியைச் சந்தித்துவரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது பணியாளர்களின் ஊதியத்தில் 10 முதல் 30 விழுக்காடு வரை பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

SpiceJet
SpiceJet

By

Published : Mar 31, 2020, 5:10 PM IST

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று தற்போது 185 நாடுகளுக்கு மேல் பரவிவருகிறது. உலகெங்கும் இந்த வைரஸ் தொற்றால் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 38,721 பேர் உயிரிழந்தனர். வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

விமான போக்குவரத்து காரணமாக மிக எளிதில் வைரஸ் ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கும் மற்ற பகுதிகளுக்கும் பரவுவதால், பல நாடுகளும் விமானச் சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன் காரணமாக, மற்ற துறைகளைவிட வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு துறையாக விமானத் துறை உள்ளது.

இச்சூழலில் இந்தியாவின் புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட், தனது பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தனது பணியாளர்களுக்கு ஸ்பைஸ்ஜெட் எழுதியுள்ள கடிதத்தில், "உலகிலுள்ள அனைத்து விமான நிறுவனங்களும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விதிவிலக்கு இல்லை.

இதனால், மார்ச் மாதத்திற்கான ஸ்பைஸ்ஜெட் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து 10 முதல் 30 விழுக்காடு வரை பிடித்தம் செய்யப்படும். ஸ்பைஸ்ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் ஊதியத்திலிருந்தும் 30 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும்.

தற்போது நிலவிவரும் மிக நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது", என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இண்டிகோ, ஏர்கோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெருங்கியவர்களுடன் இணைய கூகுள் டியோவின் அட்டகாச அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details