ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு பிரிட்டன், பஹ்ரைன், கனடா ஆகிய நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. வரும் சில வாரங்களில் மேலும் பல நாடுகளும் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அதை விரைவாக விநியோகிப்பது என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க ஓம் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஸ்பைஸ்ஜெட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலகெங்கும் ஓம் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு 1,200 அலுவலங்கள் உள்ளன. அதேபோல இந்தியா முழுவதும் சுமார் 19 ஆயிரம் பகுதிகளில் ஓம் லாஜிஸ்டிக்ஸ் தனது சேவையை வழங்குகிறது.
அதேபோல ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சரக்கு சேவைக்காகத் தனியாக ஸ்பைஸ் எக்ஸ்பிரஸ் என்ற பிரிவு உள்ளது. மிகவும் குறைந்த வெப்பநிலையில் (-40°c முதல் 25°c) மருந்துகளை ஏற்றிச் செல்லும் திறனும் தனது விமானங்களில் உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் மற்றும் இறுதிகட்ட சாலை மார்க்கமான போக்குவரத்திற்கு ஓம் லாஜிஸ்டிக்ஸின் குளிரூட்டப்பட்ட லாரிகள் பயன்படுத்தப்படும். அதேபோல வான்வழிப் போக்குவரத்திற்கு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 உள்நாட்டு மற்றும் 45 சர்வதேச இடங்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது சேவையை வழங்குகிறது. மேலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 17 சரக்கு விமானங்கள் உள்ளன. இதன்மூலம் ஒரு நாளைக்கு 500 டன் சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும்.
இதையும் படிங்க: ரூ.75,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு: வால்மார்ட் அறிவிப்பு