புல்லட் பைக்குகளுக்குப் பெயர் பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின், பியூனஸ் ஏர்ஸ் நகரில் வாகனங்களை ஒன்றிணைத்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், முதல்முறையாக சென்னைக்கு வெளியே வாகனங்களை அசம்பிள் செய்ய அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அர்ஜென்டினாவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தற்போது அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அர்ஜென்டினா நாட்டின் ராயல் என்ஃபீல்ட் வாகனங்களை விநியோகம் செய்யும் குருப்போ சிம்பா நிறுவனத்தின் தொழிற்சாலையில் வாகன அசெம்பிளி செய்யப்படவுள்ளது. அங்கு ஹிமாலயன், இன்டர்சபட்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மாடல்களின் இருசக்கர வாகனங்கள் அசெம்பிள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் தாசாரி கூறியதாவது," ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தொடர்ந்து பன்னாட்டு சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் சில்லறை விற்பனை நிலையங்களை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது ஆசிய-பசிபிக் பகுதிகளிலும், தென் அமெரிக்க பகுதிகளிலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் உள்ளூர் தொழிற்சாலைகளில் அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
பாரம்பரியம் மிக்க இந்திய வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்டு உற்பத்தியானது, இந்தியாவில் இதுவரை சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்தது. திருவொற்றியூர், ஒரகடம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் புல்லட் வாகனங்கள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பபடுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வாகனத்தின் விற்பனை சந்தையை தற்போது உலகளவில் விரிவுபடுத்தியுள்ள நிலையில், முதல் முறையாக சென்னையை அடுத்து வெளியே வாகனத்தை அசெம்பிள் செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோமேஷன் தலைநகராகும் இந்தியா!