டெல்லி: பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும், பொருளாதார வளர்ச்சியின் வேகம் மந்தமாக உள்ளது.
அதே நேரத்தில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை நிலையான அதிகரிப்பைக் கண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நவம்பர் 4, 2016 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த நோட்டுகள் ரூ.17.74 லட்சம் கோடியிலிருந்து, அக்டோபர் 29, 2021 வரை ரூ.29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. புழக்கத்தில் இருந்த நோட்டுகள் ரூ.2,28,963 கூடுதலாக அதிகரித்துள்ளது. இதுவே அக்டோபர் 30, 2020 நிலவரப்படி ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்தது.
மேலும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு 2019-20ல் முறையே 14.7 விழுக்காடு மற்றும் 6.6 விழுக்காடாக அதிகரித்து, 2020-21ல் 16.8 விழுக்காடு மற்றும் 7.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மேலும், டெபிட்/கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) படி, நாட்டில் UPI வாயிலாக பணம் செலுத்தும் முறை வேகமாக அதிகரித்து வருகிறது.