கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
லாபம் எப்படி?
இந்நிலையில், 2020-21ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 15 விழுக்காடு குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.11,262 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் லாபமாக ஈட்டிருயிருந்த நிலையில், இந்தாண்டு ரூ.9,567 கோடியாக அந்நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.
காரணம் என்ன?
கரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்துவருவதால், பெட்ரோல்-டீசல் பயன்பாடு குறைந்து, தேவையும் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பிரதான தொழிலாக செய்துவரும் ரிலையன்ஸின் லாபம் இதனால் பெருமளவு குறைந்ததுள்ளது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பதன் மூலம் கடந்தாண்டு 9.4 டாலர்களை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் நிறுவனத்தால், இந்தாண்டு வெறும் 5.7 டாலர்களை மட்டுமே லாபமாக ஈட்ட முடிகிறது.