கரோனா பாதிப்பு காரணமாக சீனா தவிர உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியப் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாகச் சரிந்தது. அதேபோல பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி 7.5 விழுக்காடு சரியும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான தகவல்கள் காரணமாக பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட விரைவில் மீளும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5 விழுக்காடு சரியும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கைக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள காணொலியில், "இந்த நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில் நமது பொருளாதாரம் வளர்ச்சி 0.1 விழுக்காடு வளர்ச்சியுடன் நேர்மறைப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல நான்காம் காலாண்டில் பொருளாதாரம் 0.7 விழுக்காடு வரை வளரும் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.