தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சிறு குறு நடுத்தர நிறுவனங்களை பாதிக்கும் மூலப் பொருள்கள் விலையேற்றம்! - சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்

சென்னை: கரோனா ஊரடங்கின் மத்தியில் ஏற்கனவே தொழில்துறை முடங்கியுள்ள நிலையில், எஃகு, அலுமினியம், செம்பு ஆகிய மூலப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

சிறு, குறு நிறுவனங்களை பாதிக்கும் மூலப் பொருட்கள் விலை உயர்வு
சிறு, குறு நிறுவனங்களை பாதிக்கும் மூலப் பொருட்கள் விலை உயர்வு

By

Published : Apr 16, 2021, 7:47 PM IST

Updated : Apr 16, 2021, 7:56 PM IST

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் முக்கிய மூலப்பொருள் ஆதாரமாக எஃகு, அலுமினியம், செம்பு உள்ளிட்ட உலோகங்கள் விளங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்தியே உதிரி பாகங்கள், உபப் பொருட்களை இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்நிலையில் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் எஃகு, அலுமினியம், செம்பு, ஜிங்க் ஆகிய பொருள்களின் விலை தற்போது தொடர்ந்து உயர்ந்து வருவது தொழில் துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் தொழில் துறை பெருமளவு முடங்கியுள்ள நிலையில், இந்த மூலப்பொருள்களின் விலை உயர்வு தொழில் முனைவோரை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்துள்ள இறக்குமதி

இது குறித்து டான்ஸ்டியா பொதுச் செயலாளர் வாசுதேவன் பேசுகையில், "எஃகு விலை கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்வு கண்டுள்ளது. அதேபோல் அனைத்து மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. கூடுதல் விலையை ஆர்டர் வழங்கிய நிறுவனங்களிடம் கோரினால் அவர்கள் தர மறுக்கிறார்கள். இதனால் எங்களிடம் நிறுவனங்கள் பழைய விலைக்கே செய்துகொடுக்க வேண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் விலை உயர்வதால் தாங்களும் விலையை உயர்த்துவதாக உலோக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், சீனா போன்ற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அச்சத்தால் நிறுவனங்கள் இறக்குமதியைக் குறைத்துள்ளன. அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

தங்கம், வெள்ளி போல் அன்றாடம் விலையில் மாறுபாடு

உலோக விலை உயர்வால் தங்கள் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வருகிறது என்கிறார் கோவை குறு மற்றும் சிறு உருக்காலை அதிபர்கள் சங்கத் தலைவர் சிவ சண்முக குமார். "நாங்கள் தயாரிக்கும் பொருள்கள்தான் அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை. தற்போது மூலப் பொருள்களின் விலை 45 விழுக்காடு விலை உயர்வு கண்டுள்ளது, அதற்கேற்றார் போல் எங்கள் விற்பனை விலையை 45 விழுக்காடு உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இங்குள்ள நிறுவனங்கள் லாபம் இல்லாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கின்றன. பின் எப்படி நாங்கள் தொழில் வரியைக் கட்டுவது, வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவது? விலை ஏற்றத்தால் பெரு நிறுவனங்கள் ஆர்டர்களைக் குறைத்துள்ளதால் தொழில் ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது" என்றார் கவலையுடன்.

தொடர்ந்து விலை ஏற்ற இறக்கம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் புதிய ஆர்டர்களைத் தருவதில்லை என கூறும் தொழில்துறையினர், எஃகு, தாமிரம் போன்ற மூலப் பொருள்கள் தங்கம், வெள்ளி போன்று அன்றாடம் விலை ஏற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர்.

மூலப் பொருள்கள் தட்டுப்பாடு

மூலப் பொருள்களின் விலை ஏற்றம் குறித்து காக்லூர் தொழிற்பேட்டையில் ஹூன்டாய், யமஹா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வழங்கி வரும் பாஸ்கரன் பேசும்போது, "விலை ஏற்ற இறக்கத்தால் உரிய நேரத்தில் ஆர்டர்களை வழங்க முடியவில்லை. இதனால் புதிய ஆர்டர்களும் வருவதில்லை. ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தியில் ஈடுபடுகையில், ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு உலோகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அனைத்து உலோகங்களின் விலையும் அதிகரித்துள்ளது. கிலோ 550 ரூபாயாக இருந்த தாமிரம், தற்போது 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அலுமினியம் தற்போது 350 ரூபாயாக உள்ளது. அதேபோல், மதிப்புக்கூட்டு சேவைகளின் விலையும் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.

விலை உயர்வுக்கு மத்தியில் பல இடங்களில் மூலப் பொருள்களுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. சிறு, குறு நிறுவனங்கள் என்பதால் எங்களால் மொத்தமாக பொருள்களை வாங்கி வைக்கவும் முடியாது" என்றார்.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், கரோனா தொற்று, ஊரடங்கு ஆகியவற்றால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த சிறு, குறு நிறுவனங்களுக்கு அடுத்த பாதிப்பாக இந்த மூலப் பொருள்கள் விலை உயர்வு அமைந்துள்ளது. இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:மீண்டும் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்? தொழில் துறையினர் அச்சம்

Last Updated : Apr 16, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details