கோவிட்-19 பரவல் சர்வதேச அளவில் கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகள் கரோனா தொற்றால் பல இன்னல்களைச் சந்தித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்தது.
இந்தச் சூழ்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஐரோப்பாவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையமும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறைந்த கார்பனை வெளியிடும் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும்வகையில் வாகனங்களைத் தயாரிப்பதில் முதலீடுகள் அதிகரிக்கும்பட்சத்தில் அது லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இது நாடுகளைப் பசுமையானதாகவும் பொருளாதார ரீதியாக வலுவானதாகவும் மாற்றும். இதன்பின் தயாரிக்கப்படும் வாகனங்களில் 50 விழுக்காடு வாகனங்கள் மின்சார வாகனங்களாகத் தயாரிக்கப்படும்பட்சத்தில் அது ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இதுதவிர ஐரோப்பிய நாடுகள் பொதுப்போக்குவரத்துகளில் முதலீடுகளை அதிகரிக்கும்பட்சத்தில் புதிதாக 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.