வரும் 2020 ஏப்ரல் மாதம் முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தும் நடைமுறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பான பயிற்சி கூட்டம் மற்றும் பயனாளர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நாடு முழுவதும் உள்ள ஜிஎஸ்டி அலுவலகங்களில் இன்று நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வடக்கு ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனங்கள், வரி செலுத்துவோர், பட்டயக் கணக்காளர்கள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையர் ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர்கள் செந்தில் வேலவன், தமிழ்வேந்தன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
புதிய ஜிஎஸ்டி முறைக்கான சோதனை ஓட்டம், இது தொடர்பான பயனாளர்களுக்கு பயிற்சி, மேலும் இதனை எளிமையாக நடைமுறைப்படுத்துவது, மேம்படுத்துவது தொடர்பாக பயனாளர்களிடம் கருத்துகேட்பு ஆகியவை நடைபெற்றது.
சிறு நிறுவனங்களின் பிரச்னையைத் தீர்க்குமா புதிய ஜிஎஸ்டி நடைமுறை? 70 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கும் கீழ் வர்த்தகம் செய்துவருகின்றனர். அவர்கள் மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வதால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு, மிகுந்து சிரமத்திற்கு ஆளாவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், சிறு நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பேசிய தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த வெங்கடேசன், "முந்தைய நடைமுறை கடினமாக இருந்தது, தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்தலாம் என்ற நடைமுறை வரி செலுத்துவோருக்கு எளிமையாக இருந்தாலும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார். பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்துவந்த நிலையில் தற்போது இந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பயனாளர்கள் பலரும் கருத்துதெரிவித்தனர்.
அதே நேரத்தில், பெரு நிறுவனங்கள் மாதம் ஆயிரக்கணக்கில் வரி ரசீதை (இன்வாய்ஸ்) கையாளும் சூழ்நிலையில், ஜிஎஸ்டி இணையதளத்தில் 500-க்கு மேல் வரி ரசீதுகளை பார்க்க இயலவில்லை என்றும் அவற்றை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சிரமமாக உள்ளதாகவும் ஜிஎஸ்டி நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார். ஜிஎஸ்டி ஆணையரகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாகக் கூறியவர்கள், புதிய நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன் இதுபோன்று மேலும் சில கூட்டங்கள் நடத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்த பயிற்சி மட்டுமின்றி 'சப்கா விஷ்வாஸ் திட்டம்' குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருவதாகக் கூடுதல் ஆணையர் தமிழ் வேந்தன் கூறினார். "சப்கா விஷ்வாஸ் திட்டம் மூலமாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வரி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் முந்தைய காலங்களில் முறையாக வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் அதற்கு அபராதம், வட்டி, குற்ற வழக்குகள் இல்லாமல் தீர்வு காண முடியும்.
வழக்குகளைப் பொறுத்து, செலுத்தும் வரியிலிருந்து 40 முதல் 70 சதவிகிதம் வரை விலக்கு அளிக்கப்படும், வரிக்கான வட்டி வசூலிக்கப்படமாட்டாது. இந்தத் திட்டம் வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடையும். இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது நீட்டிக்கப்படாது" எனத் தெரிவித்தார்.
புதிய நடைமுறையில் உள்ள சிறம்பம்சங்கள் குறித்து விளக்கிய வடக்கு ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் செந்தில் வேலவன், "பழைய நடைமுறையில், மாதக் கடைசியில்தான் பொருள்கள் வாங்கியதற்கான ரசீதை (இன்வாய்ஸ்) ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புதிய நடைமுறையில், நாள்தோறும் வரும் ரசீதுகளை அன்றைய தினமே பதிவேற்றம் செய்யலாம். இதற்காக மாத இறுதிவரை காத்திருக்கத் தேவையில்லை.
'சப்கா விஷ்வாஸ் திட்டம்' குறித்து விழிப்புணர்வு இவ்வாறு அவ்வப்போது வரி கணக்குளை பதிவேற்றம் செய்வதால் மாத இறுதியில், பயனாளர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகை எவ்வளவு என்ற விவரம் தெரிந்துவிடும். அதேபோல், மூலப்பொருள்கள் வழங்கியவர்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தால் அந்த விவரமும் உங்களுக்கு உடனடியாகத் தெரிந்துவிடும். இதனால் பொருள்கள் வாங்கியதற்கான உள்ளீட்டு வரிக்கடன் (Input Tax Credit) எவ்வளவு என்று தெரிந்துவிடும்" என்றார் விரிவாக.
இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் எழுச்சி பெறுவதற்கான வழிமுறைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா?