கரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், வேலையின்மை காரணமாக எழுந்துள்ள பிரச்னைக்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முக்கிய தீர்வாக அமைந்துள்ளது.
இது குறித்து மத்திய கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத் ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களைவையில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், நடப்பாண்டில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணிகளுக்கான தேவை கடந்தாண்டை ஒப்பிடும் போது 38.8 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் உருவாக்கப்பட்ட பணிகள் கடந்தாண்டை ஒப்பிடும்போது இரு மடங்கு உயர்வைச் சந்தித்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் 64.95 லட்சம் பணியாட்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த நிலையில், இந்தாண்டில் அது 86.8 லட்சமாக உயர்வைச் சந்தித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியான 61 ஆயிரத்து 500 கோடியில் 60 ஆயிரத்து 599 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு இதுவரை விடுவித்துள்ளது. அத்துடன் கிரமாப்புற மேம்பாட்டிற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கூடுதல் நிதியாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முன்னேற்றம்