மத்திய கனரக தொழில்கள், பொது நிறுவன அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக்கிழமை (ஏப்30) காணொலி வாயிலாக வாகனத் தொழில் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அப்போது ஊரடங்கு முடிந்ததும் தொழில் துறையை மீண்டும் தொடங்குவதற்கான வழிகளை அவர்கள் பரிந்துரைத்தனர்.
இக்கூட்டத்தில், பிரதமர் மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்ததைக் குறிப்பிட்ட பிரகாஷ் ஜவடேகர், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயில் ஆட்டோமொபைல் துறை பெரும் பங்களிப்பை அளிப்பதாகத் தெரிவித்தார்.
இந்தத் தொழில் நாட்டின் உள்நாட்டு மொத்தஉற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது. கடந்தாண்டு, தொழில் பாதிக்கப்பட்ட போதும் அரசுக்கு பெருமளவு வருவாய் கிடைத்தது.
இது குறித்து பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "காணொலி வாயிலான சந்திப்பின்போது, ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி குறைப்பு, வேலைவாய்ப்பு ஆதரவு, சில்லறை சங்கிலி ஆதரவு, தேவை பெருக்கம், பணப்புழக்க ஆதரவு போன்ற பல விவாதங்களும் கோரிக்கைகளும் எழுந்தன” என்றார்.
மேலும், “கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்கொள்ளும்வகையில் ஒருவருக்கொருவர் தகுந்த இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் ஜவடேகர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்டோமொபைல் வாகனத் துறையின் பிரதிநிதிகள், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கத்தின் (Society of Indian Automobile Manufacturers- SIAM) தலைவரும், வாகனத் துறையின் தலைவருமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் கெனிச்சி அயுகாவா, சியாமின் துணைத் தலைவரும், மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனரும் (எம்.டி.) தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆர்.சி.பர்கவா, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான பவன் முஞ்சல், பயணிகள் வாகன வர்த்தகப் பிரிவு, டாடா மோட்டார்ஸ் லிமிடெட் தலைவர் சைலேஷ் சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கும் ரிலைன்ஸ்