கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் ரூபாய் கோடி மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
இருப்பினும், பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் இந்தியப் பொருளாதாதரத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பல பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிதியாண்டில் பொருளாதாரம், 10 விழுக்காடு வரை சரிவைச் சந்திக்கும் என்று முன்னாள் நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சுபாஷ் சந்திர கார்க் தனது ப்ளாக் (blog) பக்கத்தில், "கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் ரூபாய் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் உண்மையான மதிப்பு வெறும் 1.5 லட்சம் ரூபாய் கோடி மட்டுமே. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.7 விழுக்காடு மட்டுமே.