கரோனா வைரஸ் தொற்றால் உலகமே போராட்டக் களமாக காட்சியளிக்கிறது. இந்தச்சூழலில், சில வாரங்களாக இருநாட்டு உறவில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என இந்தோனேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. டெல்லி வன்முறையில் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்த வருத்ததை, இந்தியாவிடம் தெரிவிக்க இருவாரங்களுக்கு முன்பாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத்துக்கு அழைப்பாணை அனுப்பியது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம், மேதன் நகரில் உள்ள இந்திய துணைதூதரகம் ஆகியவற்றின் முன்பு எஃப்.பி.ஐ., ஜி.என்.பி.எஃப், பிஏ 212 போன்ற தீவிர இஸ்லாமிய அமைப்புகள் இரண்டு வாரங்களாகப் போராட்டங்களை நடத்தி வந்தன. இந்த மூன்று இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையி்ல், “இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான கருவியாக, இந்து குழுக்களால் குடியுரிமைத் திருத்தச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுக்கு இந்தோனேஷியா தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தோனேசிய வட்டாரங்கள் அளித்த விளக்கத்தில், ”இந்தியதூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கான காரணம், ஜகார்த்தாவின் கவலைகளை ஒரு செய்தியாக தெரிவிப்பதற்கு மட்டுமே. மற்றபடி இந்தியா, தமது உள்நாட்டு விஷயங்களில் ஏற்பட்ட பதற்றங்களை தீர்க்கும் வல்லமை படைத்தது என்பதை இந்தோனேஷியா என்றைக்குமே நம்புகிறது” எனத்தெரிவித்தது.
இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அலுவலர், “பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட இதர அமைப்புகள் தங்கள் கவலைகள் குறித்த செய்தியைக் கூறின. அந்த கவலைகள் மட்டுமே அவர்களுக்கு(இந்திய அரசு) எடுத்துக் கூறப்பட்டது. மக்களுக்கு கவலைகள் இருக்கின்றன. ஆனால், இருநாடுகளும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடுகள் என்பதால், இந்த பிரச்னைகளில் இருந்து நாம் மீண்டு வரமுடியும் என்று இந்தோனேஷியன் அரசு நம்புகிறது” எனத்தெரிவித்தார்.
டெல்லி வன்முறையின்போது வலதுசாரி தேசியவாதிகளைக் கொண்ட கும்பல், முகமது ஜூபைர் என்ற இஸ்லாமியர் தலையில் கடுமையாகத் தாக்கியது. அவர் தன்னை விட்டுவிடக் கூறி தரையில் குனிந்தபடி கெஞ்சியபோதும் அவரை விடவில்லை. இவரின் புகைப்படம் வன்முறையின் கோர முகமாக வைரலானது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை அமைதிப்படுத்தினால்தான், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என இந்தோனேஷியா அரசுதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஜகார்த்தாவில் இன்னும் இரண்டு நாட்களில் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என நம்புவதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆயிரத்து 100 காவல்துறையினர் இந்திய தூதரகத்தின் முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபடும். சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம்செய்யப்படும். கடந்த காலங்களில் பாலீஸ்தீன விவகாரம் தொடர்பாக, எந்தொரு வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன்பு தடைவிதிக்கப்படிருந்தது.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள போராட்டங்களில் ஈடுபடாத பெரிய இஸ்லாமிய அமைப்பான எம்.யூ.ஐ உள்ளிட்ட அமைப்புகளும், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்த கவலையில் உள்ளன. டெல்லி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என நம்புகிறது. எனினும், இந்த எம்.யூ.ஐ அமைப்பானது, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கு உண்மை அறியும் குழுவை அனுப்பி, சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப சிறுபான்மையினர்களைப் பாதுகாக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தவேண்டும்” என்று கடுமையாக வலியுறுத்தியது. இந்த அறிக்கையானது. “சி.ஏ.ஏ-வை பாரபட்சமானது” என வரையறுத்துள்ளது.