டெல்லி: தற்போது இந்தியாவில் உள்ள 50 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் நாடு முழுவதும் இரண்டு லட்சம் வேலைவாய்ப்பை வழங்க முடியும் எனத் தனிப்பொறுப்புடன்கூடிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (பிப்ரவரி 18) தெரிவித்தார்.
இது குறித்து அவர் 'இந்திய முதல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் 2022 மற்றும் விருதுகள் உச்சி மாநாடு' நிகழ்வில் பேசுகையில், "இந்தியா அதன் எல்லையற்றத் திறன், வியாபாரம் செய்வதற்கான எளிமை, அரசால் எளிதாக்கப்பட்ட சாதகமான ஒழுங்குமுறைச் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் உலகின் விருப்பமான ஸ்டார்ட்அப் ஆக உருவாகிவருகிறது.
ஸ்டார்ட்அப் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்பு
2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது இலக்கான ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதை உறுதிசெய்வதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வலுவான சூழல் அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.
2021இல் மட்டும் பல்வேறு திட்டங்களால் இந்தியாவில் 10 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
டிஜிட்டல் ரூபாய், 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிப் பிரிவுகள், டிஜிட்டல் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பம், ட்ரோன் சக்தி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஸ்டார்ட்அப்-கள் போன்ற புதுமையான புதிய முயற்சிகளின் அறிவிப்புகள் டிஜிட்டல் உந்துதல், புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப்-பின் பங்களிப்பு
மேலும், 2024ஆம் ஆண்டுவரை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுவரை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கான இதரச் சலுகைகள் உலக அளவில் ஸ்டார்ட்அப்களில் இந்தியா முன்னிலை வகிக்க உதவும்.
உலகின் விருப்பமான ஸ்டார்ட்அப் ஆக வளர்ந்துவரும் இந்தியா மாநில சேவைகள், சுகாதாரம், வேளாண்மை, நிதிச் சேவைகள், கல்வி, சில்லறை வணிகம், தளவாடங்கள் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீட்டு வாய்ப்புகளின் வளர்ச்சி மூலம் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். மேலும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பைச் செலுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெறும் 45 விநாடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த இளம் யூ-ட்யூபர்!