டெல்லி: முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் தலைவர் பொறுப்பிலிருந்து சிவ் நாடார் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகளான ரோஷிணி நாடார் தலைவர் பொறுப்பை உடனடியாக ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், சிவ் நாடார் தலைவர் பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதேவேளை நிறுவனத்தின் தலைமை மேலாளர், சி.எஸ்.ஓ ஆகியப்பொறுப்புகளில் அவர் தொடர்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுமார் 1.50 லட்சம் ஊழியர்களைக் கொண்ட ஹெச்.சி.எல் நிறுவனம் கடந்த காலாண்டில் 8.6 விழுக்காடு வருவாய் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. கோவிட் காரணமாக எழுந்துள்ள பொருளாதார மந்த நிலையையும் மீற ஹெச்.சி.எல் நிறுவனம் கண்டுள்ள வளர்ச்சி சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவ் நாடார், 1976ஆம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தைத் தொடங்கினார். 2008ஆம் ஆண்டு மத்திய அரசு, இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது.
இதையும் படிங்க:தெலங்கானாவில் மாயமான 2 ஆயிரம் கரோனா நோயாளிகள்!