ஜனவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,33,026 கோடியாக வசூலிக்கப்பட்டது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,435 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ.30,779 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.67,471 கோடி மற்றும் மேல்வரி ரூ.10,340 கோடி.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.26,347 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.21,909 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாய் வழக்கமான, தற்காலிக பணம் செலுத்துதலுக்குப்பின்பு, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.50,782, மாநில ஜிஎஸ்டிக்கு ரூ. 52,688 கோடியாக இருந்தது.
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருந்ததால் ஜனவரியை விட வருவாய் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியை 5-வது முறையாக கடந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக மேல்வரி வசூல் ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளதற்கு முக்கிய துறைகள் குறிப்பாக வாகனங்கள் விற்பனை அதிகரித்ததும் காரணமாகும்.