செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தத்தொகை 23 விழுக்காடு அதிகமாகும். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகியுள்ளது.
செப்டம்பர் மாத புள்ளிவிவரப்படி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகை ரூ.60,911 கோடியாகவும், மத்திய ஜிஎஸ்டி ரூ.28,512 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.24,140 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. செஸ் வரியாக ரூ.8,754 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.