விவசாயிகளுக்கு அவர்கள் சாகுபடி செய்த பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. அந்த ஆதரவு விலை உண்மையில் அவர்களுக்கு பலனளிக்கக் கூடியதாக இருக்கிறதா? சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு எந்த அளவில் ஏற்றுக்கொண்டது என்பது குறித்து நிதித் துறை வல்லுநர் பேராசிரியர் சீரால சங்கர் ராவ் விவரிக்கிறார்.
அரசு ஆதரவு என்பது சொல்லில் மட்டும்தானா?
விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்பொருட்டு, 2020-21ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கு 14 வகையான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பயிர் உற்பத்திச் செலவில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஆதரவு விலை உள்ளது என்றும் அரசு கூறுகிறது. இருப்பினும், உண்மையான நிலைமை வேறுபட்டதாகத் தெரிகிறது. சில பயிர்களுக்கு, ஆதரவு விலை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
உண்மையில், பல நிதி வல்லுநர்கள் சுவாமிநாதன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கும் மத்திய அரசு வழங்கும் ஆதரவு விலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருதுகின்றனர்.
2020-21 சம்பா சாகுபடி காலகட்டத்தில் 14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்துள்ள மத்திய அரசு, அனைத்துப் பயிர்களுக்கும் அளிக்கப்படும் ஆதரவு விலை, கடந்தாண்டு வழங்கப்பட்டதைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் இது பயிர் சாகுபடிக்கு ஆகும் உற்பத்திச் செலவைவிட 50 விழுக்காடு அதிகம் என்றும் அது கூறுகிறது.
இதன்மூலம் வருங்காலத்தில் நாட்டில் வேளாண்மை செய்வதற்கு விவசாயிகளுக்கு அதிக ஊக்கமளிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. இப்போது அறிவிக்கப்பட்ட ஆதரவு விலை மொத்த உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50 விழுக்காட்டை விவசாயிக்கு அளிக்க பரிந்துரைத்த சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஏற்றவாறு இல்லை.
உற்பத்திச் செலவுகள்தான் விவசாயத்தின் முக்கிய அம்சம்
வேளாண்மைச் செலவுகள், விலைக்கான ஆணையம் ஒரு குறிப்பிட்ட பயிரின் ஆதரவு விலையை விவசாயிக்கு நன்மை பயக்கும்வகையில் நிர்ணயிக்க அரசு அறிவுறுத்துவதற்கு முன், வேளாண்மையின் ஏழு முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறது.
அவற்றில் மிக முக்கியமானது உற்பத்திச் செலவு. உற்பத்திச் செலவை நிர்ணயிப்பதற்கான சரியான வழிமுறை இல்லாத நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் செயல்முறை மூலம் விரும்பிய முடிவுகளை எட்ட முடியாது.
வேளாண்மைச் செலவுகள், விலைக்கான ஆணையம் பயிர்களின் உற்பத்திச் செலவை எட்டு வழிகளில் கணக்கிடுகிறது.
முதலாவது A1 வகை, அதில் விவசாயி அந்தப் பயிரின் ஒரு குவிண்டால் அறுவடைசெய்யும் இலக்குடன் 14 வெவ்வேறு செலவினங்களில் செலவழித்த செலவுகள் கணக்கிடப்படுகின்றன.
A1 வகையில் பயிர் சாகுபடி செலவில் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான செலவும் சேர்க்கப்படும்போது சாகுபடிக்கான A2 வகை பயிர் செலவு கணக்கிடப்படுகிறது.
A2 வகையில், நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கான செலவு A1 வகை பயிர் சாகுபடி செலவில் சேர்க்கப்பட்டு, சாகுபடி செலவு கணக்கிடப்படுகிறது
B1 செலவு வகை, சொந்தமான நிலையான மூலதன சொத்துகளின் (நிலத்தைத் தவிர்த்து) வட்டி மதிப்பை A1 சாகுபடி செலவில் சேர்ப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
B1 செலவு, சொந்தமான நிலத்தின் வாடகை மதிப்பு (நில வருவாயின் நிகர), குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்குச் செலுத்தப்படும் வாடகை ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் B2 செலவு கணக்கிடப்படுகிறது.
குடும்ப உழைப்பு மதிப்பை B1 செலவினங்களுடன் சேர்க்கும்போது, நாம் C1 செலவுகளைத் கணக்கிடலாம், அதே குடும்ப உழைப்பு மதிப்பை B2 உடன் சேர்ப்பதன் மூலம், C2 செலவுகளைக் கணக்கிடலாம்.
சந்தை மதிப்பு அல்லது சட்டப்பூர்வமான மதிப்புகளின்படி உழைப்பின் குறைந்தபட்ச மதிப்பு சேர்க்கப்படும்போது, C2 (ஸ்டார்) செலவைக் கணக்கிடலாம்.
உற்பத்தி, மேலாண்மைச் செலவினங்களில் பத்து விழுக்காட்டை C2 செலவில் சேர்க்கும்போது C3 உற்பத்திச் செலவைப் பெறலாம்.
C3 உற்பத்திச் செலவு என்பது உண்மையில் விவசாயி சாகுபடி செய்யும் பயிரின் மொத்த பொருளாதார உற்பத்திச் செலவு ஆகும்.
சாகுபடி, வேளாண்மை தவிர பிற தொழில்களில், ஒரு குறிப்பிட்ட உற்பத்தியின் மொத்த செலவு விகிதம் C3 உற்பத்திச் செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதேபோல், வேளாண்மைத் துறையிலும், எந்தவொரு உற்பத்தியின் ஊதிய விலையும் C3-இன் மொத்த உற்பத்திச் செலவில் தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியம்.
அப்போதுதான் வேளாண்மை அடுத்த தலைமுறைக்கு ஒரு சாத்தியமான விருப்பமாக இருக்கும், மேலும் கடின உழைப்பிற்கு கிடைக்கும் திருப்திகரமான பலனே விவசாயிகளுக்கு லாபகரமாகவும் இருக்கும்.
உற்பத்திச் செலவுகள் (நிலம், உழைப்பு, மூலதனச் செலவு ஆகியவற்றின் சொந்த வளங்களின் செலவில் செலுத்தவேண்டிய தொகைக்கு கூடுதலாக) விவசாயியால் செலுத்தப்படும் பராமரிப்புச் செலவுகள், நேரடி மற்றும் மறைமுகச் செலவுகளைத் தவிர்த்தல் போன்றவை ஓரளவு நியாயமாக இருந்தால் மட்டுமே விவசாயி வேளாண்மையை ஒரு வாழ்வாதாரமாக மேற்கொள்ள முடியும்.
அதன்படி, 2006ஆம் ஆண்டில், C2 உற்பத்திச் செலவை கருத்தில்கொண்டு பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை சுவாமிநாதன் ஆணையம் தீர்மானித்தது.
இருப்பினும், மத்திய அரசு இதற்கு இணங்காமல் மொத்த சாகுபடி செலவில் ஒருவரின் சொந்த குடும்ப உழைப்பை, அதாவது A2 செலவை மட்டுமே சேர்த்தது அதற்கு மேல், 50 விழுக்காடு மதிப்பு கூட்டப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக விவசாயி தனது சொந்த நிலம், மூலதனம், உரிமையை இழக்க நேரிடும்.
சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த விலை கொள்கையுடன் ஒப்பிடும்போது, இப்போது அறிவிக்கப்பட்ட பயிர் ஆதரவு விலை சுமார் 25 விழுக்காடு குறைவாக உள்ளது. இதன்மூலம் விவசாயிக்கு ஏற்படும் இழப்பு ஒரு குவிண்டால் நெல் பயிருக்கு ரூ.633, சோளப்பயிரில் சுமார் ரூ.790, மக்கா சோளம் பயிரில் ரூ.559, துவரம்பருப்பில் கிட்டத்தட்ட ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,196 ஆக உள்ளது, உளுந்து பயிரில் இது ரூ.2,355 ஆகவும், வேர்க்கடலைப் பயிர்களில் ரூ.1,493, பருத்தியில் ரூ.1,888 ஆகவும் இருக்கிறது.
குறைந்த எண்ணிக்கையிலான கொள்முதல் மாதிரிகள், போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் போன்ற பிற செலவுகளைப் பயிர் சாகுபடி செலவினங்களைக் கணக்கிடுவதில் சேர்க்காததால், பயிர்களுக்கு அரசு அறிவித்த ஆதரவு விலை உண்மையான பயிர் உற்பத்திச் செலவுகளைப் பிரதிபலிக்கவில்லை.
அனைத்து மாநிலங்களுக்கும் சமமான ஆதரவு விலையை அறிவித்ததால், அரசு அறிவித்த விலையைவிட சாகுபடிக்கு அவர்கள் செய்த முதலீடு மிக அதிகமாக இருப்பதால் தங்கள் சாகுபடியில் அதிக உற்பத்திச் செலவுகளைச் செய்துள்ள சில மாநிலங்களின் விவசாயிகள், பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அதே சமயம், தங்கள் பயிர்களைப் பயிரிடுவதில் குறைந்த முதலீடு செய்துள்ள சில மாநிலங்களின் விவசாயிகள் அரசின் விலை நிர்ணயம் மூலம் அதிக நன்மை பெறுகின்றனர். எனவே, ஒரே ஆதரவு விலையை அனைத்து மாநிலங்களிலும் சமமாகச் செயல்படுத்துவது என்பது அவ்வளவு சாத்தியமில்லை என்று தெரிகிறது.
நடைமுறையில் உள்ள சிக்கல்கள்
குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அரசு நடைமுறைப்படுத்தும் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டம் குறித்து நாட்டில் சுமார் 30 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள்.
மேலும், திட்டம் பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் பயிர்களை அரசு தானிய சேகரிப்பு மையங்களில் விற்க முன்வந்து இந்தக் திட்டங்களால் பயனடைகிறார்கள்.
குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ் 80 விழுக்காடு அரிசி, கோதுமை கொள்முதல் செய்யப்படுகின்றன. ஓரளவிற்கு கரும்பையும் அரசு கொள்முதல்செய்கிறது.
இதில், 50 விழுக்காடு நெல், 75 விழுக்காடு கோதுமை பயிர் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து பெறப்படுகின்றன.
தானிய கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பரவலாக்கப்பட்டாலும் அது கள அளவில் செயல்படுத்தப்படவில்லை. தெலுங்கு மாநிலங்களிலிருந்து வரும் பெரும்பாலான பயிர்கள் அவ்வளவாகக் கொள்முதல் செய்யப்படவில்லை.
எனவே, நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் சில பயிர்களுக்கும் சில மாநிலங்களுக்கும் மட்டுமே நன்மை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை அரசு நேர்மையுடன் தீர்க்க வேண்டும்.
சுவாமிநாதன் ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கப்பட வேண்டும். வெவ்வேறு உள்ளூர் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில்கொண்டு இவை மாநில அளவில் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட மாநிலத்தின் சந்தை விலையின்படி போக்குவரத்து, சந்தைப்படுத்தல் போன்ற பிற செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உற்பத்தியாகும் அனைத்துப் பயிர்களையும் கொள்முதல் செய்தல், பரவலாக்கம் ஆகியவற்றில் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு ஆதரவு விலையை தீர்மானிப்பதிலும் செயல்படுத்துவதிலும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்
இதுபோன்ற கொள்கைகள் குறித்து விவசாயிகளுக்கு முழுமையாகக் கல்வி கற்பிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் அரசு அறிவிக்கப்பட்ட பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையிலிருந்து வேளாண்மைத் துறையும் விவசாயிகளும் பயனடைய முடியும்.
விவசாயிக்கு நம்பிக்கை அளித்தல்!
2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான மத்திய அரசின் இலக்கை அனைத்து மாநிலங்களின் விவசாயிகளுக்கும் பொருத்தமான, சாதகமான ஆதரவு விலையை வழங்க முடிந்தால் மட்டுமே அதை அடைய முடியும்.
சரியான குறைந்தபட்ச ஆதரவு விலை வழிமுறையை சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே இதை மேலும் அடைய முடியும். வேளாண்மைச் செலவுகள், விலை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, வேளாண்மைப் பருவம் தொடங்குவதற்கு முன்னர் நாட்டில் 22 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய வேளாண் அமைச்சகம் ஆண்டுதோறும் அறிவிக்கிறது.
கரும்புக்கான குறைந்தபட்ச சந்தை விலையை குடிமைப் பொருள்கள் துறை அறிவிக்கிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் விவசாயிகளிடமிருந்து பயிரை குறிப்பிட்ட விலையில் அரசு வாங்குவதால் அவர்களின் குறைந்தபட்ச வருமானம் உறுதிசெய்யப்படுகிறது.
பல்வேறு பயிர்களைப் பயிரிட விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும், உணவு மற்றும் பிற வேளாண்மைப் பொருள்களை அதிகரிப்பதற்கும் மட்டுமல்லாது தானியங்கள், எண்ணெய் வித்துக்களை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கி, குடிமைப்பொருள்கள் விற்பனை மையங்களில் ஏழைகளுக்கு வழங்குவதன் மூலம் அடிப்படை ஆதரவு விலைமூலம் அரசுக்கு உதவ வழிவகுக்கும்.
இதையும் படிங்க:'அரசின் 3 வேளாண்மை சீர்த்திருத்தங்களைவிட நிலச்சீர்த்திருத்தமே முக்கியம்...!'