சர்வதேச அளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு உள்ள மோகத்தை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் சுமார் 800 முதல் 900 டன் வரையிலான தங்கம் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இருப்பினும், இந்தாண்டு கரோனா காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு பெரியளவில் குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 47.42 விழுக்காடு குறைந்து 9.28 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 68.5 ஆயிரம் கோடி) உள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 17.64 பில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 1.31 லட்சம் கோடி) மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தாண்டு வெள்ளியின் இறக்குமதியும் 64.65 விழுக்காடு குறைந்து 742 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் 5.5 ஆயிரம் கோடி) உள்ளது.