டெல்லி: புவிசார் குறியீடு பெற்ற வேளாண் விளைபொருட்களுக்கு பெரியளவில் ஏற்றுமதி சந்தை உள்ளது. அந்தவகையில் நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் நிறைந்த புவிசார் குறியீடு பெற்ற 'ஜல்கான் வாழைப்பழம்' பெருமளவு துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி கொள்கையின் அடிப்படையில், உற்பத்தியைப் பொறுத்து புவிசார் குறியீடுபெற்ற 22 மெட்ரிக் டன் ஜல்கான் வாழைப்பழங்கள் மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டம் தண்டல்வாடி கிராமத்தில் இருந்து ஏற்றுமதிக்குப் பெறப்படுகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு, ஜல்கான் வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீட்டு அங்கீகாரம் கிடைத்தது. இந்த அங்கீகாரத்தை நிசார்க்ராஜா கிரிஷி விக்யன் கேந்திரா என்னும் அமைப்பு பதிவு செய்தது.
அதிகரிக்கும் வாழைப்பழ ஏற்றுமதி
இந்தியாவினுடைய வாழைப்பழ ஏற்றுமதி, தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏனென்றால், நம் இந்தியர்கள் உலகத் தரத்துக்கு இணையாக தங்களது விவசாய உற்பத்தி நடைமுறைகளை பெருக்கிக்கொண்டதே இதற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய வாழைப்பழங்கள் எண்ணிக்கையிலும் அது ஈட்டித்தந்த வருமானத்திலும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 2018-19 காலகாட்டத்தில், 1.34 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் விற்பனை மதிப்பு ரூ.413 கோடி ஆகும். அதேபோல், கடந்த 2020-21 காலகட்டத்தில், 1.94 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் விற்பனை மதிப்பு ரூ.660 கோடி ஆகும்.
2020 -21 நடப்பாண்டில்( ஏப்ரல் - பிப்ரவரி), இந்திய ஒட்டுமொத்தமாக 1.91 லட்சம் டன் வாழைப்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்மதிப்பு ரூ.619 கோடி ஆகும்.