நாடு முழுவதும் இயங்கிவரும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த முடிவைக் கைவிடக் கோரி, இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இயங்கிவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இழப்புகள் ஏற்படுவதாகக்கூறி, மாநில கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டுவந்த கடன் வழங்கும் முறையை மாற்றி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை கண்டித்து குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (ஜூலை20) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குமரி மாவட்டச் செயலாளர் ரவி கூறுகையில், "அவசர சட்டத்தை இயற்றி கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவானது விவசாயிகளை முழுமையாக வஞ்சிக்கும்.
கிராமப்புறங்களில் மக்களின் மேம்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக விவசாய கடன், மத்திய கால கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் போன்றவை தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது இந்தக் கடன் வழங்கும் முறையை மாற்றி மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து தான் கடனைப் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது, அதன் மூலம் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து படிப்படியாக காணாமல் போகும் அபாயம் ஏற்படும்.
மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. எனவே, கடன் வழங்குவதை மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றக்கூடாது" என்றார்.