பொதுவாக வருங்கால வைப்புநிதியில் ஊழியர்கள் தகவல்களைத் தாக்கல்செய்யும் நிறுவனங்கள், அத்துடன் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம்செய்யும் 12 விழுக்காடு தொகையையும் நிறுவனங்கள் அளிக்கும் 12 விழுக்காடு தொகையையும் செலுத்த வேண்டும். நிறுவனங்கள் இந்த இரண்டையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
தற்போது கோவிட்-19 பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சில பெரு நிறுவனங்களேகூட ஆள்குறைப்பு பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில்கொண்டு வைப்புநிதியில் ஊழியர்களின் தகவல்களை (Monthly electronic challan-cum-return - ECR) தாக்கல்செய்யும் நடைமுறையையும் வைப்புநிதி செலுத்தும் நடைமுறையையும் பிரித்துள்ளதாகத் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.