நான்காவது கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக, சிவப்பு மண்டலப் பகுதிகளிலும் அத்தியாவசியமற்ற பொருட்களை சப்ளை செய்யும் பணியை நேற்று முதல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உட்பட நாட்டின் பெரும்பான்மையான பெருநகரங்கள் சிவப்பு பட்டியலில்தான் உள்ளன. ஆனால் மூன்றாவது கட்ட லாக்டவுன் அறிவிப்பின்போது, அத்தியாவசியமற்ற பொருள்களை, சிவப்பு மண்டல பகுதிகளில் விற்பனை செய்வதற்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டல பகுதிகளில் அனைத்து வகை பொருள்களையும் ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்த அனுமதி கிடைத்த போதிலும், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் ஏற்படவில்லை. எனவே அவை அத்தியாவசிய பொருள்களை சிவப்பு மண்டல பகுதிகளிலும் விநியோகிக்க உரிமை வழங்க கேட்டுக்கொண்டபடி இருந்தன. இந்த நிலையில்தான் நான்காவது கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக அமேசான் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், மத்திய அரசு கொண்டு வந்த இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது என்றும் இதுமூலம் 6 லட்சம் சிறு, நிறுவனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் நிறுவனம் கூறுகையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், ஆன்லைன் சப்ளை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுபோல பொருள்களின் சப்ளைக்கு அனுமதி கிடைத்துள்ளதால், இனிமேல் சிறு குறு நிறுவனங்களின் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். இது வரவேற்கத்தக்க முடிவு என்று தெரிவித்துள்ளது.
அனைத்து பகுதிகளிலும் விற்பனை தொடர்ந்தாலும் டெல்லி, மும்பை போன்ற பகுதிகளில் விற்பனை நடைபெறாது என இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது இந்த இணைய வழி ஷாப்பிங். சின்ன பொம்மை முதல் பெரிய டிவிவரை அனைத்தையும் அமேசான் , பிளிப்கார்ட் மூலம்தான் பொதுமக்கள் வாங்கிவருகின்றனர் . இந்த சூழலில் இதன் சேவை தடைப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு அதாவது மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு சேவையை தொடங்க இருக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் பாதுகாப்பான வைகையில் மக்களுக்கு சேவை புரிவோம் என தெரிவித்துள்ளது.
மேலும் மக்களும் கிடைக்கப்படும் பொருள்களை உடனடியாக பயன்படுத்தாமல், அவற்றை சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்துவது நல்லது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மேலும் 3 மாதங்களுக்கு EMI ஒத்திவைக்க வாய்ப்பு - ஆய்வில் தகவல்