சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்று காரணமாக தற்போது 184 நாடுகளைச் சேர்ந்த இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது.
தினமும் நூற்றகணக்கானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 30 விழுக்காடுவரை மருத்துவ காப்பீடுகளைப் பெற மக்கள் ஆர்வம் காட்டுவதாக பாலிசிபஜார்.காம் (Policybazaar.com) தெரிவித்துள்ளது.
இது குறித்து பாலிசிபஜார்.காம் நிறுவனத்தின் மருத்துவ காப்பீடுகள் பிரிவின் தலைவர் அமித் சாப்ரா கூறுகையில்,"மருத்துவ காப்பீடுகளின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பு காப்பீடுகளை வாங்கியவர்களும், காப்பீடுகள் வாங்குவதைத் தள்ளிப் போட்டவர்களும் இப்போது தாங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் என்னவாகும் என்று அச்சம் கொண்டு மருத்துவ காப்பீடுகளைப் பெறுகின்றனர்.
இன்னும் குறிப்பாகச் சொன்னால் பாலிசிபஜார் தளத்தில் ஊரடங்கிற்குப் பின் மருத்துவ காப்பீடுகள் 30 விழுக்காடு வரையும் ஆயுள் காப்பீடுகள் 20 விழுக்காடு வரையும் அதிகரித்துள்ளன. இளைஞர்களும் முதல்முறையாகக் காப்பீடுகளைப் பொறுவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.