கோவிட்-19 என்னும் மாபெரும் கொடிய தொற்றுப் பரவலுக்கு உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் மக்கள் பலியாகி உள்ளனர். ஆயினும் அது இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வ உணர்வுக்கு ஒன்றும் அணை போட்டு விடவில்லை. ஏனென்றால் கடந்த நிதியாண்டில் (2020-21) பொதுப் பங்குகளிலும், ரைட்ஸ் பங்குகளிலும் செய்யப்பட்டிருக்கும் முதலீடு முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது அதிகரித்திருக்கிறது என்பதை சமீபத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஐபிஓ-க்கள் (ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல்), மற்றும் எஃப்பிஓ-க்கள் (பின்தொடரும் பொதுப்பங்கு வழங்கல்) உட்பட பொதுப்பங்கு வழங்கல் மூலமாக திரட்டப்பட்ட நிதி முந்தைய நிதியாண்டை விட இரட்டிப்பாகி இருக்கிறது. மேலும் சிறப்புப் பரஸ்பர நிதி (unique mutual fund) முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் பத்து சதவீதம் அதிகரித்திருக்கிறது.
இவை எல்லாம் கோவிட் உலகத்தொற்று அரக்கன் முதலீட்டாளர்களைப் பாதித்திடவில்லை என்பதையே காட்டுகிறது.
கடந்த நிதியாண்டில் (2020-21) ஐபிஓ-க்கள் உட்பட எல்லாப் பொதுப் பங்குகளின் மூலமும் ரூபாய் 46,000 கோடியையும், ரைட்ஸ் பங்குகளின் மூலம் ரூபாய் 64,000 கோடியையும் நிறுவனங்கள் திரட்டி இருக்கின்றன. முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது இவை முறையே 115 சதவீத, 15 சதவீத வளர்ச்சிகளைச் சந்தித்திருக்கின்றன.
முந்தைய நிதியாண்டான 2019-20-ல் நிறுவனங்கள் பொதுப் பங்குகளின் மூலம் ரூபாய் 21,382 கோடியையும், ரைட்ஸ் பங்குகளின் மூலம் ரூபாய் 55,670 கோடியையும் திரட்டி இருந்தன.
ஐபிஓ-க்கள், எஃப்பிஓ-கள், ரைட்ஸ் பங்குகள்
நிதி அமைச்சகம் திரட்டித் தந்திருக்கும் தரவுகளை ஆராய்ந்துப் பார்த்தால், முந்தைய நிதியாண்டான 2019-20-ல் நிறுவனங்கள் 60 ஐபிஓ-க்கள் (ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 21,345.11 கோடி) மூலமாகவும், இரண்டு எஃப்பிஓ-க்கள் (பின் தொடரும் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 37.24 கோடி) மூலமாகவும் ஆகமொத்தம் ரூபாய் 21,382.35 கோடித் தொகையைத் திரட்டி இருந்தன.
2020-21 நிதியாண்டில் நிறுவனங்கள் 55 ஐபிஓ-க்கள் (ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 31,029.71 கோடி) மூலமாகவும், ஒரேவொரு எஃப்பிஓ (பின் தொடரும் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 15,000 கோடி) மூலமாகவும் ஆகமொத்தம் ரூபாய் 46,029.71 கோடியைத் திரட்டி இருக்கின்றன.
2019-20-ல் 17 ரைட்ஸ் பங்கு வழங்கல்கள் மூலம் நிறுவனங்கள் ரூபாய் 55,669.79 கோடியைத் திரட்டின. அந்தத் தொகை 2020-21-ல் 21 ரைட்ஸ் பங்கு வழங்கல்கள் மூலம் 15 சதவீதம் உயர்ந்து ரூபாய் 64,058.61 கோடியைத் தொட்டது.
கணக்குப் போட்டுப் பார்த்தால், கடந்த நிதியாண்டில் நிறுவனங்கள் 55 ஐபிஒ-க்கள், 1 எஃப்பிஓ, 21 ரைட்ஸ் பங்கு வழங்கல்கள் மூலம் திரட்டிய ஒட்டுமொத்தத் தொகை ரூபாய் 1,10,088.31 கோடி. அதாவது முந்தைய நிதியாண்டை விட இது முதலீட்டுத் துறையில் 43 சதவீத வளர்ச்சி ஆகும்.