தனியார் மயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுனங்களுக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ' பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர் (CONCOR), டி.எஃச்.டி.சி(THDC), நீப்கோ (NEEPCO) உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார். மேற்கண்ட நிறுவனங்கள் முழுமையாக தனியார் வசம் கொடுக்கப்படவுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்குகளை 50 விழுக்காட்டுக்குக் கீழ் குறைத்து நிர்வாகத்தை மட்டும் தன்னிடம் வைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.