ஒரு நிறுவனத்தின் சேவையை நாம் பயன்படுத்தும்போது அந்நிறுவனத்தின் தனியுரிமை கொள்கை எனப்படும் Privacy policy சார்ந்த கொள்கையை நம் ஒப்புக்கொள்ள வேண்டும். பயனாளர்களின் தரவுகளை சேகரிப்பது தொடர்பான இந்த முக்கிய டாக்குமென்ட் பெரும்பாலும் நாம் படித்திருக்கவே மாட்டோம்.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் பிரைவேசி பாலிஸிகள் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏர்டெல்லின் தனியுரிமைக் கொள்கையில், "பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், பாலியல் சார்பு நிலைகள், இனம், மொழி, மத மற்றும் அரசியல் நம்பிக்கை, நிதித் தகவல் மற்றும் அரசியல் கருத்து போன்ற தரவுகளைச் சேகரிக்கவும் அவற்றை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளவும் ஏர்டெல் நிறுவனத்திற்கு உரிமை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் மத அல்லது அரசியல் நம்பிக்கைகள், உடல்நலம், பாலியல் சார்பு உள்ளிட்ட தரவுகளை ஏர்டெல் சேகரிப்பதாக நேற்று தகவல் வெளியானது முதலே இது இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.