இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் இணைய தாக்குதல்களால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வெளியான அறிக்கையில், கடந்த 12 மாதங்களில் மட்டும் சுமார் 82 விழுக்காடு இந்திய நிறுவனங்கள் மீது இணைய வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 விழுக்காடு அதிகமாகும்.
இணைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் சுமார் 66 விழுக்காடு நிறுவனங்கள், தங்கள் தரவுகளை மீட்க ஹேக்கர்களுக்கு பெருந்தொகை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளன. ஹேக் செய்யப்பட்ட நிறுவனங்களில் சுமார் 91 விழுக்காடு நிறுவனங்களின் தரவுகளை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக டெல்லியில் 85 விழுக்காடு நிறுவனங்களும், பெங்களூருவில் 83 விழுக்காடு நிறுவனங்களும், கொல்கத்தாவில் 81 விழுக்காடு நிறுவனங்களும், மும்பையில் 81 விழுக்காடு நிறுவனங்களும், சென்னையில் 79 விழுக்காடு நிறுவனங்களும் இணைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சோபோஸ் நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் செஸ்டர் விஸ்னீவ்ஸ்கி கூறுகையில், "ஹேக்கர்கள் கேட்கும் பணத்தைச் செலுத்துவதன் மூலம் நேரத்தைச் சேமித்து எளிதில் தரவுகளைத் திரும்பப் பெறலாம் என்றே பல்வேறு நிறுவனங்களும் அவர்கள் கேட்கும் பணத்தை அளிக்கின்றனர்.
ஆனால் பணத்தை அளித்த பிறகு ஹேக்கர்கள் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றி தரவுகளை மீட்டெடுக்க பல மணி நேரங்கள் ஆகும். இதனால் நிறுவனங்களுக்குப் பல நாள்கள் வரை வீணாகும்" என்றார்.