மொய் விருந்தின் சிறப்பே அனைவருக்கும் வயிறார உணவு கொடுப்பதுதான். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாதி, மதமின்றி ஒரு இலையில் ஒன்றிணைக்கும் திருவிழாவாக பார்க்கப்படும் நாளே மொய் விருந்து. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், ஆவணம், வடகாடு உள்ளிட்ட இடங்களில் வெகு விமர்சையாக காலங்காலமாக விருந்தை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள் மக்கள். இந்த நாளை ஆவலாக எதிர்பார்க்கும் விருந்து உபசரிப்பாளர் ஒரு பக்கமும், அதனை உற்சாகத்துடன் வரவேற்கும் பொதுமக்கள் ஒரு பக்கமும் இருக்க ஊரே திருவிழா நிகழ்வில் களைகட்டி இருக்கிறது.
விருந்து ஆடி மாதம் தொடங்கி, ஆவணி வரை நடைபெறும். இரண்டு மாதம் ஊரே சாப்பாடு, கறிச்சோற்றால் நிறைந்திருக்கும். காலை 8 மணிக்கே தொடங்கும் விருந்து, மதியம் 4 மணிக்குள் முடிந்துவிடும். 12 மணிக்கு இலையில் பரிமாறப்படும் சாப்பாடு மாலை 4 மணிக்குள் சுத்தமாகிவிடும். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாப்பிடும் உணவின் ருசியே தனித்துவமானது. அதிலும் அவ்விருந்தில் வைக்கப்படும் கறிகுழம்பை ருசிக்கவே ஒரு தனி கூட்டம் இருக்கும். விருந்தில் எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவர்தான் சாப்பிட வரவேண்டும் என்ற விதிமுறை கிடையாது.
மொய் விருந்து எப்படி தொடங்கியது?
ஏதேனும் நல்ல நாள், பெரு நாள் திருமணம், துக்க நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பணம் இல்லாமல் தவிக்கும் போது உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் மொய் விருந்து. ஆனால் நாளடைவில் மொய் விருந்தாக உருவெடுத்து திருவிழா போல் மாறியது. முன்பெல்லாம் 50, 100 என்றே தொடங்கும் மொய் தற்போது 500, 1000 ஆக உயர்ந்திருக்கிறது. மொய் விருந்திற்கு வரி இல்லை என்பதால் கோடிகளில் புரளுகிறது இத்திருவிழா. இதனை வைத்து நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னுக்கு வந்தவர்களும் உள்ளனர். பணத்தை பார்த்த ஆசையில் அதனை பரிகொடுத்தவர்களும் உள்ளனர். மொய் விருந்தில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
மொய் விருந்தின் நன்மை!
மொய் விருந்தினால் இரண்டு மாதத்திற்கு இடைவிடாது உணவு நிச்சயம். இரண்டு மாதங்கள் சமையல் செய்பவர் தொடங்கி, பத்திரிக்கை பிரிண்ட் அடிப்பவர் வரை பலரின் தொழில் செய்பவர்களுக்கும் லாபம் உண்டு. வருடா வருடம் விருந்து நடத்துபவர் இம்மாதத்தை எதிர்கொண்டு காத்திருப்பர். சுவையான உணவு, ருசியான சாப்பாடு, வயிறு நிறைந்து மனது நிறைந்து வாழ்த்தும் உள்ளத்தின் மனதையும் கட்டாயம் வெல்வர்.