உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. டவுன்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொர்டோசா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர் கெயில் ரன் ஏதும் எடுக்காமல் ஆழந்து, அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து, ஷாய் ஹோப் - லெவிஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 116 ரன்களை சேர்த்த நிலையில், லெவிஸ் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிகோலஸ் பூரான் 25 ரன்களில் வெளியேறினாலும், ஹோப் உடன் ஜோடி சேர்ந்த ஹெட்மயர் அதிரடியாக ஆடினார்.
26 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் என 50 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அதிரடி வீரர் ரஸல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக, கேப்டன் ஹோல்டர் தன் பங்கிற்கு 33 ரன்களுடன் வெளியேறினார்.இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 43.4 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்களை எடுத்திருந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹோப் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது. இப்போட்டியில் கெயில், ரஸல் போன்ற நட்சத்திர வீரர்கள் சொதப்பினாலும், லெவிஸ், ஹோப், ஹெட்மயர் ஆகிய இளம் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைகொடுத்து, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்தனர். வங்கதேச அணி தரப்பில் முகமது சைஃபுதீன், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.