கோவையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வார சந்தையில் காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக வாரச்சந்தைகள் இயங்க இன்றுவரை அரசு அனுமதிக்காத நிலையில் வாரச் சந்தைகளை மீண்டும் தொடங்க அனுமதி கேட்டு 50-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
அப்போது, அவர்கள் காய்கறிகளை விற்க அனுமதி அளிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முழக்கங்களை எழுப்ப தொடங்கினர்.
பின்னர் அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கடைகள் இயங்குவதற்கு தளர்வு அறிவித்த அரசு காய்கறி வியாபாரிகளையும் கண்டுகொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு கடைகளை இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் கூறினர்.