திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கில் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கொடுக்கபட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து கெளசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட மூவரை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் உடுமலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி வரும் நிலையில், உடுமலை அடுத்த வடபூதனம் கிராமத்தில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
மேலும் புதிய தமிழகம் கட்சி சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து வடபூதனம் கிராம மக்கள் கூறுகையில், 'உயர் நீதிமன்ற தீர்ப்பில் உரிய நீதி கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு வழக்கை சரிவர நடத்தவில்லை. மேலும் இந்த வழக்கில் உரிய நீதி பெற தமிழ்நாடு அரசை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, சங்கர் கொலைசெய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறோம்'எனத் தெரிவித்தனர்.