நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வேலம்புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார்(31). எம்சிஏ பட்டதாரியான இவர், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கும்பகோணம் அம்மன்குடியைச் சேர்ந்தவர் வர்ஷா(21). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி சங்கரன்பந்தலில் திருமணம் நடைபெற்றது. அப்போது, 25 சவரன் நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை வர்ஷா வீட்டினர் சீதனமாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் சோஃபா, அம்பாசிடர் கார், மேலும் நகை உள்ளிட்டவை வேண்டும் என்று கணவர் வீட்டினர் தொந்தரவு செய்து வந்தனர்.
இதனிடையே, மே மாதம் 24ஆம் தேதி தாய்வீட்டில் தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மூன்று தங்க நகை வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், கரோனா ஊரடங்கு முடிந்ததும் செய்வதாக வர்ஷா வீட்டினர் கூறினர். பின்னர், வர்ஷா 2 மாத கர்ப்பிணியாக இருப்பது இரு நாட்களுக்கு முன்பு உறுதியானது. இதையடுத்து, வர்ஷாவை அவரது சகோதரர் நேற்று (ஜூன் 4) கணவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.