திருப்பூர், காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்காதர்(54). இவர் காசிபாளையம் அருகே பனியன் வேஸ்ட் துணிகளை பஞ்சாக மாற்றும் குடோன் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், இன்று (ஜூன் 26) மாலை பஞ்சு பொதியில் இருந்து புகை வந்ததை கண்ட பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், பஞ்சு பொதியில் தீ வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் வெளியே தப்பி ஓடி வந்தனர்.
வேகமாக பரவிய தீ அருகில் இருந்த இரண்டு பஞ்சு குடோன்களுக்கும் பரவியதால் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இது குறித்து தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு வீரர்கள், 10 தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் எரித்து சேதமடைந்தன. இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.