திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே என்.ஏ.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதா அரசு பள்ளி ஆசிரியை.
நேற்று காலை கரூரில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றனர். இன்று வீடு திரும்பிய கந்தசாமி - அமுதா தம்பதியினர் தங்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின் பீரோவில் இருந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த ரூ 1.50 லட்சம் மதிப்புள்ள புதிய லேப்டாப், இரண்டு சவரன் தங்க நகை, ரொக்கப் பணம் பத்தாயிரம் ரூபாய் உள்பட மொத்தமாக ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருடி சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.