தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முழு ஊரடங்கு: சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட டிஐஜி ! - Tiruchi range DIG inspects corona prevention work in bicycle

திருச்சி: முழு ஊரடங்கு செயல்பாடுகளை திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா ஊரடங்கு :  சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட டிஐஜி !
கரோனா ஊரடங்கு : சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட டிஐஜி !

By

Published : Jul 5, 2020, 3:08 PM IST

Updated : Jul 5, 2020, 4:52 PM IST

உலகளாவிய பெருந்தொற்றான கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

காய்கறி மார்க்கெட், கறிக்கடை என அனைத்தும் பூட்டப்பட்டு இருப்பதால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகக்கூட வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரக டிஐஜியாக ஆனி விஜயா இரு நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இன்று காலை முதல் ஐந்து மாவட்டக் காவல் நிலையங்களிலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செயல்பாடுகளுக்குத் தடைவிதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது சைக்கிளில் டிராக் சூட் அணிந்துகொண்டு ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டார்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சைக்கிள் மூலம் அவர் பயணித்து, சோதனைச் சாவடிகளில் இருந்த காவலர்களுடன் கலந்துரையாடினார். சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை அவர் பயணித்து தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.

Last Updated : Jul 5, 2020, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details