தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மீண்டும் தொடங்கிய ஓஎன்ஜிசி கட்டுமானப்பணிகள் - விவசாயிகள் அச்சம் - Construction work

நாகப்பட்டினம்: நிறுத்தப்பட்ட ஓஎன்ஜிசி பணிகள், மீண்டும் கட்டுமான பொருட்களை இறக்கி பணிகளை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ONGC construction resumed
ONGC construction resumed

By

Published : Jul 10, 2020, 12:41 AM IST

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் குருவாடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம், கடந்த 2010 ஆம் ஆண்டு பூமியில் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்க அமைத்த ஆழ்துளை கிணறுகளை மக்களின் கடும் எதிர்ப்பால் 2012 ஆம் ஆண்டு நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து குருவாடி கிராமத்தில், மீண்டும் பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஒஎன்ஜிசி எரிவாயு எடுக்கும் பணிகளை தொடங்க முதற்கட்ட பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதனால் குருவாடி அண்ணா மண்டபம் திருச்செங்காட்டங்குடி உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இந்த சூழ்நிலையில் ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஹைட்ரோகார்பன் எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட எந்த பணிகளும் குருவாடி கிராமத்தில் நடைபெறாது என ஓஎன்ஜிசி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக விவசாயிகளிடம் உறுதி அளித்தது.

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி ஓஎன்ஜிசி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குருவாடி கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் ரிக் அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இடம் தூய்மை செய்யப்பட்டதுடன், கருங்கல், மண், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை இறக்கி ஃபில்லர் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றதால், அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஓஎன்ஜிசி நிர்வாகம் கூறியுள்ள நிலையில், திடீரென கட்டுமான பொருட்கள் இறங்குவதற்கான காரணம் என்ன? காங்கிரீட் வேலைகள் நடைபெற்று இருப்பதற்கான காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளை அப்பகுதி விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.

மேலும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் பணிகளை ஓஎன்ஜிசி நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளுடன் பேசிய பொழுது, மேற்கண்ட குருவாடி கிராமத்தில் போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்றில் எந்தவிதமான எரிவாயு கிடைக்கவில்லை என்றும், அந்தப் பகுதியில் போடப்பட்டிருக்கும் எரிவாயு எடுப்பதற்கான எந்திரங்களை அகற்ற உண்டான வேலைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் விளக்கம் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details