சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த அப்புச்சாமி (38). இவர் சிறுவயது முதல் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர் வீடுகளில் திருடிவிட்டு அந்த வீடுகளில் தீ வைத்து எரிக்கும் யுக்தியைக் கையாண்டு, தடயங்கள் இன்றி தப்பிப்பார்.
இவர் மீது சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர், கோவை எனப் பல்வேறு காவல் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு, பண்ணாரி கோயில் பக்தர் ஒருவரின் பணத்தைப் பறித்துவிட்டு, தப்பியோட முயன்ற அப்புச்சாமியை காவல் துறையினர் துரத்திச் சென்று, கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 100 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி அப்புச்சாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் அப்புச்சாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.