மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
151 பயணிகள் ரயில்கள், 109 வழித்தடங்களை தனியாருக்குவிட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிதி ஆயோக் அறிவித்த அதே வழித்தடங்களில், இந்த 151 ரயில்கள் தனியாருக்கு விடப்படும். 35 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ளலாம். டிரைவரும் கார்டும் மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களும் தனியார் ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்.
இந்த வண்டிகள் நவீன தொடர் வண்டிகளாக இருக்கும். 16 கோச்சுடன், 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த வண்டிகள் சாதாரண மக்களுக்கான வண்டிகளாக இருக்கப்போவதில்லை. இப்போது எல்லா வண்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தனியாருக்கு அவர்களுக்கு விருப்பமான நேரத்தில் வண்டிகள் ஓட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கரோனா தொற்றை ஒட்டி ஏற்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்திய ரயில்வேயின் லட்சியங்களில் அதாவது வேகமான, பாதுகாப்பான, கட்டுப்படியான ரயில்கள் என்ற லட்சியம் தூக்கி எறியப்படுகிறது. 151 ரயில்களில் தெற்கு ரயில்வேக்கு பதினோரு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, பெங்களூரு என ஐந்து ரயில்கள் தனியாருக்கு ஒதுக்கப்படும்.