பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோவை காந்திபுரம் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “கோவையில் கடந்த சில காலங்களாகவே கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த காலங்களில் நடைபெற்ற அந்தக் கொடூரமானது திரும்ப ஏற்படப்போகிறது என்று உணர்த்துவதே கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்.
கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டுவருகிறது. கோயிலைச் சேதப்படுத்தியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுவது ஏற்கும்படி இல்லை. அவர் எந்த அமைப்பையும் சாராதவர் என்று கூறுவதும் ஏற்கும்படி இல்லை. திமுக இந்துக்களுக்கு எதிரான செயல்களில் திராவிட இயக்கங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது போலவே அதிமுகவும் தற்போது செய்து கொண்டிருக்கிறது.
கோவைக்கு இஸ்லாமிய பயங்கரவாதம், தனித்தமிழ் நக்சல் இயக்கங்கள் ஆகிய இரண்டு ஆபத்துக்கள் இருக்கின்றன. இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்கள் தாக்கப்படுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கிறார் என்றால், இந்து மக்களின் ஓட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்று பொருள். இந்த விவகாரத்தில் அதிமுக அரசு விளித்துக் கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய தோல்வியைத் தழுவ நேரிடும்.
இதுபோன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு சுதந்திரமாக விடுவதில்லை. கறுப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது வெட்கக்கேடான ஒன்றாக இருக்கிறது. கோயில்கள் தாக்கப்பட்டதில் ஒரே இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மட்டுமே காவல் துறை முடிவெடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோவை மாநகரக் காவல் ஆணையரை நேரில் சந்தித்து, புகாரளிக்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்