நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கடைக்கண் விநாயகர்நல்லூரைச் சேர்ந்த அரசு டாஸ்மாக் கடையின் இரவு விற்பனை முடிந்து, கடை மேற்பார்வையாளர் இளஞ்செழியன், விற்பனையாளர் காமராஜ், ஓட்டுநர் வெற்றிவீரன் மூன்று பேரும் கடையைப் பூட்டி விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், கொள்ளிடம் ரயில்வே கேட் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், காரை கற்களால் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில், காரின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து, மேற்பார்வையாளர் இளஞ்செழியனின் தலையில் பலத்த காயமும் ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காரை நிறுத்தினால் தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என எண்ணிய ஓட்டுநர் வெற்றிவீரன், வண்டியை நிறுத்தாமல் செலுத்தி சீர்காழி அரசு மருத்துவமனையை அடைந்து மேற்பார்வையாளர் இளஞ்செழியனை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி கொள்ளை முயற்சி இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்த மூவரும், மது விற்பனைப் பணமான மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே தாங்கள் தாக்கப்பட்டதாகவும், காரை இடைவிடாமல் இயக்கியதால் பணம் தப்பியது எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க :பள்ளியை சுற்றி ஆக்கிரமிப்பு: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!