இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்னாட்டு காந்தி”, “படிக்காத மேதை”, “கர்மவீரர்” என்று அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடும் இவ்வேளையில், அவரைப் பற்றி நினைவுக்கூர்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.
கடந்த 1903 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் நாளில் பிறந்த பெருந்தலைவர் , நாட்டுக்காக உழைப்பதையே தனது லட்சியம் என கொண்டிருந்தார். பெருந்தலைவர் நமது தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்.
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், ஆங்கிலேய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர், சுதந்திரப் போராட்டத்திற்காக பலமுறை சிறை சென்ற தியாகசீலர்.
திருமணமும், இல்லறமும் சமுதாயப் பணிக்கு தடையாக இருக்கும் என பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். கடந்த 1954 ஆம் ஆண்டில், அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் சமுதாயத்தை படிப்பறிவு மிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கினார். பல தொழிற்சாலைகளை நிறுவி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
அதே போன்று, நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் பல அணைகளை கட்டிய பெருமைக்குரியவர்.“பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய எளிமை, தமிழ்நாட்டை மட்டுமல்ல; இந்தியாவை மட்டுமல்ல; உலகத்தையே வசீகரித்து இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் உடையில் மட்டுமல்ல, உணவில், பிறருடன் பழகுவதில், மேடை பேச்சு, இப்படி எல்லாவற்றிலும் அவருடைய ஒளி வீசியது”