இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனக் கருவிகள், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், மழைதூவான் போன்ற உபகரணங்கள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் அமைத்துத் தரப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 30.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மா, வாழை, நெல்லி போன்ற பழப்பயிர்கள், வெண்டை, கத்தரி, பாகல், பூசணி, மரவள்ளி போன்ற காய்கறிப் பயிர்கள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி போன்ற மலர் பயிர்கள் ஆகிய தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், துணை நீர் பாசன மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட வட்டங்கள் மற்றும் குறுவட்டங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தநிலை கிணறு அமைப்பதற்கு ரூபாய் 25,000 மானியமும், மின்மோட்டார் மற்றும் டீசல் இன்ஜின் வாங்குவதற்கு ரூபாய் 15,000 மானியமும், பாசன நீர் பிவிசி பைப்புகள் வாங்குவதற்கு ரூபாய் 10,000 மானியமும், நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சமாக ரூபாய் 40,000 மானியமும் வழங்கப்படுகிறது.