உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தேதிகளை முன்மொழிந்து, அதில் ஒரு நாளை தேர்வு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்ட் நேற்று (ஜூலை 20) அழைத்திருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேசியவாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், கோவில் கட்டுவதன் மூலம் கரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை எவ்வாறு நடத்துவது, மக்களை எப்படி காப்பாற்றுவது, நாட்டின் பொருளாதாரத்தை எவ்விதம் மீட்டெடுப்பது என்று நாங்கள் அனைவரும் யோசித்து வருகிறோம்.
ஆனால் ஒரு கோவிலைக் கட்டுவதன் மூலம் கரோனா வைரஸ் பாதிப்பைத் தணிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நமது முன்னுரிமை ஊரடங்கால் பாதிப்படைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவதாக இருத்தல் வேண்டும்.
பொருளாதார நெருக்கடி தொடர்பாக, மாநில மற்றும் மத்திய அரசிடம் கவனம் செலுத்துமாறு நாங்கள் கோர விரும்புகிறோம்" என வலியுறுத்தினார். சரத் பவாரின் இந்த கருத்திற்குப் பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்குப் பதிலளித்த பாஜக தலைவர் உமா பாரதி, " இன்று(ஜூலை 20) ஊடகங்களைச் சந்தித்து பேசி சரத் பவாரின் இந்த கருத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அல்ல, இந்து மக்களின் நம்பிக்கையான ஸ்ரீராமருக்கு எதிரானது.
கரோனா நெருக்கடியிலிருந்நு மக்களையும் நாட்டையும் காக்கும் பணிகளிலிருந்து, பிரதமர் மோடி ஒரு நாளும் விடுமுறை எடுப்பதில்லை. அவர் ஒரு நாளைக்கு வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்" என தெரிவித்தார்.