துணி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் கேந்திரமாக விளங்கும் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு அளவில் முக்கிய தொழில் நகரமாக உள்ளது. தொழில் நகரமான ஈரோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஈரோட்டிற்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள் அதிகளவில் தனியார் விடுதிகளில் தங்கி தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனியார் விடுதி உரிமையாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து இன்று வரை சுமார் 110 நாள்களுக்கும் மேலாக தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளது.
இதனால், தனியார் விடுதியின் வாடகை வருவாயை மட்டும் நம்பியுள்ளவர்கள் எவ்வித வருவாய் இன்றி விடுதிகளுக்கு வாடகை, மின்கட்டணம், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன், வட்டித் தொகை, விடுதிகளின் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.