இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய தொற்று நோய் பேரழிவான கரோனாவுக்கு எதிராக இந்திய தேசம் இடையறாது போராடி வருகிறது.
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் வண்ணம் அதிகப்படியான பரிசோதனைகளை நடத்துவதிலும், நோய் பரவல் தடுப்பிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும், கரோனா மரண சதவீதத்தை குறைவான சதவீதத்திற்குள் நிறுத்தியதிலும், பரிசோதனை கூடங்களை இந்தியாவிலேயே அதிகளவில் அமைத்ததிலும் என நாட்டுக்கே வழிகாட்டும், திறமைமிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஆனால், எதிர்கட்சியான திமுக கரோனாவிலும் அரசியல் செய்து மக்களை குழப்பியும், இரவு பகல் பாராது உழைக்கும் மருத்துவர்களை, செவிலியர்களை வருவாய் துறையினரை, காவல் துறையினரை, ஒட்டுமொத்தத்தில் மக்களுக்காக அரும்பாடுபடும் அரசு ஊழியர்களையெல்லாம் மனச்சோர்வு அடையச் செய்துவருகிறது.
மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்திலும் எதிர்க்கட்சியான தி.மு.க. அரசியல் செய்து வருகிறது.
கரோனா பரவலின் தொடக்கத்திலேயே சட்டப்பேரவையை நடத்தக்கூடாது, கரோனா பரவி விடும் என்று பேரவையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அன்றைய தினமே வடசென்னையில் 2,000 பேரோடு போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா தொற்று பரவிடச் செய்ததிலும், சிறுபான்மையின இஸ்லாமிய மக்கள் மீது அவசியமற்ற கரோனா பரவல் பழியை போடும் வகையில் இஸ்லாமிய மக்களை நோய் தொற்று காலத்திலும் திட்டமிட்டு போராட தூண்டியதும் ஸ்டாலின்தான்.
உலகமே வலியுறுத்தும் தனிநபர் விலகலுக்கு நேர் எதிராக “ஒன்றிணைவோம் வா” என்று ஒவ்வாத வசனத்தைப் பேசி சீரழித்தது திமுக. மக்களுக்கு நிவாரணம் வழங்குகிற தன்னார்வலர்களும் அரசின் மூலம் வழங்கலாம் அதன் மூலம் பாதுகாப்போடு மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கியதோடு, கண்டெய்ன்மெண்ட் ஜோன், ஹாட்ஸ்பாட் என நோய் பரவல் அதிகமுள்ள பகுதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையம் அமைத்த பகுதிகளுக்குச் சென்று நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரிலே மக்களிடையே கரோனாவை பரப்பி இன்றைக்கு ஒட்டுமொத்த சென்னை மக்களின் நிம்மதியை கெடுத்ததும், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்வோரால் பல மாவட்டங்களில் மீண்டும் கரோனா பரவியதற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அதிகார வெறி தான் காரணம்.
“ஒன்றிணைவோம் வா” என அரசுக்கு எதிராக தன் கட்சியினரை தூண்டி விட்டு ஸ்டாலின் நடத்திய அத்துமீறல்களால்தான் இன்று அவரது கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையே கரோனாவுக்கு பலிகொடுக்க வேண்டிய பரிதாபம் நிகழ்ந்ததோடு, இன்னும் பலருக்கு கரோனா பரவிடவும் காரணமாகிவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.