உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடிவருகிறது. நாட்டிங்ஹாமில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து, பேட்டி செய்துவரும் ஆஸ்திரேலிய அணி, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே வங்கதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்து ரன்களை சேர்த்தது. ஃபின்ச் 54 ரன்களில் ஆட்டமிழந்தாலும், உஸ்மான் கவாஜா - வார்னர் ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் மைதானத்தில் பவுண்டரி மழையாக பொழிந்தது.
சதம் விளாசிய மகிழ்ச்சியில் வார்னர் இப்போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தை விளாசினார். தொடர்ந்து மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் விளையாடிய இவர், இப்போட்டியில் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில், 14 பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள் அடங்கும்.
வார்னரை தொடர்ந்து வந்த மேக்ஸ்வெலும் தன் பங்கிற்கு பவுண்டரி மழை பொழிந்தார். 10 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 32 ரன்களுடன் நடையைக் கட்டினார். மறுமுனையில், நேர்த்தியாக பேட்டிங் செய்த கவாஜா 89 ரன்களுக்கு வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 368 ரன்களை குவித்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. மார்கஸ் ஸ்டானிஸ் ஆறு ரன்களுடனும், அலெக்ஸ் கெரி ஒன்பது ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.